Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட தொடக்க விழா செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய் தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தொடக்க விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 22-ஆம் தேதி ஒரே நாளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ள நிலையில், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் தொடக்க நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டம் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டம் ஒரே நாளில் தொடங்கப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ