Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நாளை காலை 7.40 மணிக்கு மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் இன்று கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். குடமுழுக்கு விழாவிற்காக கோவில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
குடமுழுக்கை காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாளை அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள் என்பதால் அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சாரத்தில் எத்தனை நபர்கள் நிற்கலாம், பாதுகாப்பு அம்சங்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். புனித நீர் ஊற்றப்படும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அனைத்து தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நாளை பக்தர்கள் எளிதாக வந்து சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு வழித்தடங்கள், பேருந்து வசதிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b