Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் இலவசங்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதை முறைப்படுத்தக் கோரி, பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தேர்தல் அறிக்கை என்பது ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலக்குகளை மக்களிடம் தெரிவிக்கும் ஆவணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு இலவசத் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை அறிவிப்பதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவையான சூழலில் கட்சிகளின் சின்னத்தை முடக்குவது, பதிவு அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அதேநேரத்தில், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுப்பது கடினம் என்றும், இலவசத் திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் ஒன்றாகக் கருதக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு முறையிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு மட்டுமே விட்டுவிடாமல், அவற்றை முறைப்படுத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், இதற்கான சட்டபூர்வ அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான வரைவு தேர்தல் அறிக்கையையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, தேர்தல் அறிக்கைகள் தொடர்பான இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P