Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 16 செப்டம்பர் (ஹி.ச.)
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) சிறப்பு கமாண்டோ பிரிவான ‘கோப்ரா’ படையின் புதிய ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சுக்தா பராசர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்மூலம் கோப்ரா படைக்கு தலைமை வகிக்கும் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுக்தா பராசர், 2006-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அசாமில் போடோ தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிச்சலுடன் பங்கேற்ற அவர், அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அவரது துணிச்சலான பணியை பாராட்டி அவரை ‘அசாமின் இரும்பு பெண்மணி’ என்று அழைக்கின்றனர்.
தேசிய புலனாய்வு முகமையிலும் (என்.ஐ.ஏ.) உயர் பதவி வகித்த சஞ்சுக்தா பராசர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் 2008-09-ம் ஆண்டுகளில் ‘கோப்ரா’ சிறப்பு கமாண்டோ படை உருவாக்கப்பட்டது.
அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் கொரில்லா போர் முறையை எதிர்கொள்வதில் இந்த படையினர் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.
தற்போது சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கோப்ரா படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோப்ரா படையின் ஐ.ஜி.யாக இருந்த தனேஷ் ராணாவுக்கு பதிலாக சஞ்சுக்தா பராசர் பொறுப்பேற்றுள்ளார்.
ஆபத்து நிறைந்த இந்த சிறப்பு கமாண்டோ படைக்கு முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA