நெல்லை அருகே தகராறில் ஈடுபட்ட கும்பலை தட்டிக்கேட்ட தலைமை காவலருக்கு சரமாரி அடி-உதை; 2 பேர் கைது
நெல்லை, 16 செப்டம்பர் (ஹி.ச.) நெல்லை அருகே வாகனங்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் கும்பலை பிடிக்கச் சென்ற தலைமை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ந
கைது


நெல்லை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

நெல்லை அருகே வாகனங்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் கும்பலை பிடிக்கச் சென்ற தலைமை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து 9-வது பேருந்து நிறுத்தம் பகுதியில் தாழையூத்து போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாழையூத்து-ராஜவல்லிபுரம் செல்லும் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஓட்டல் அருகே 3 பேர் கொண்ட கும்பல், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமை காவலர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பொன்மணி மற்றும் அவரது கூட்டாளிகளான சுரேஷ் என்ற பெரியசூசை, மானூர் மாவடி தேவர் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற கொம்பையா (26) ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, 3 பேரும் சேர்ந்து தலைமை காவலர் விஸ்வநாதனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முத்துக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை பொன்மணியும் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக உள்ள சுரேஷ் என்ற பெரியசூசையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam