சமூகநீதிக்காக பாடுபட்ட இராமசாமி படையாட்சியார்: எச்.ராஜா புகழாரம்
தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.) எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி எச்.ராஜா அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது; தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், முன்னாள் தமிழக உள்ளா
எச். ராஜா


தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.)

எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி எச்.ராஜா அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான திரு.S.S.ராமசாமி படையாட்சியார் என்கிற சிவ சிதம்பர ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன் 1918 செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த அவர் தனது இளம்பருவத்தில் விடுதலை போராட்டத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தேசியவாதி.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை ஸ்தாபித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே 19 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனது கட்சியை வெற்றி பெற வைத்த அரசியல் வித்தகர்.

1954 ஆம் ஆண்டு காமராஜர் தலைமையில் அமையப்பெற்ற ஆட்சியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றப் பரம்பரை பட்டியலிலே இடம்பெற்றிருந்த வன்னியர் சமூகத்தை அப்பட்டியலில் இருந்து வெளியேற்ற தாங்கள் உதவி செய்ய முன்வர தயாராக இருந்தால் நீங்கள் முதலமைச்சராக உங்களுக்கு ஆதரவளிக்க தயார் என்று கூறி மூதறிஞர் ராஜாஜி அவர்களிடம் நிபந்தனை விதித்து அதை வெற்றிகரமாக சாதித்து குற்றப் பரம்பரை பட்டியலில் இருந்து வன்னியர் சமூகம் வெளியேற்றப்பட காரணமாக இருந்தவர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தமிழகத்தில் உருவாகவும், அப்பிரிவினருக்கு மத்திய, மாநில அரசு இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறவும் முழுமுயற்ச்சி எடுத்தவர்.

தமிழக சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாது 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் பணியாற்றிய அரசியல் ஆளுமையாளர்.

திரு.சிவ சிதம்பர ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்வதிலே பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P