Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த ஜூலை 22-ம் தேதி விசைப்படகு மூலம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடலோர காவல் படையினர், மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்தனர்.
எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களின் விசைப்படகு, மீன்பிடி வலைகள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மீனவர்களின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்களது பராமரிப்பில் வைத்து, அவர்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும், 9 மீனவர்களுக்கும் விமானப் பயணச்சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் 9 மீனவர்களும் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ