கல்வி உதவித்தொகை உயர்வு - தமிழ்நாடு அரசுக்கு ஜோதிமணி நன்றி
தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.) சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமண
எம்.பி ஜோதிமணி


தமிழ்நாடு, 16 செப்டம்பர் (ஹி.ச.)

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல என்றும், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான முக்கிய கருவி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், பல ஆண்டுகளாக கல்விக் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த கல்வி உதவித்தொகை, தற்போதைய கல்விக் கட்டணங்களை ஈடுகட்ட முடியாத நிலை இருந்ததாகவும், இதனால் பல மாணவர்களின் உயர்கல்விக் கனவு பாதிக்கப்பட்டதாகவும் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சமூகநலத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, மாணவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பி.ஏ., எம்.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு ரூ.1,350-ஆக இருந்த உதவித்தொகை ரூ.11,250 முதல் ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பி.காம்., பி.எஸ்சி., பிபிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான உதவித்தொகையும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், புதிதாக 11 இளங்கலை, 10 முதுகலை மற்றும் 2 பட்டயப் படிப்புகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பதையும் ஜோதிமணி வரவேற்றுள்ளார்.

வறுமை ஒருபோதும் ஒரு குழந்தையின் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் விஜய் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P