மகன், மகள் முன்பாக மீண்டும் திருமணம் - 20 ஆண்டுகால காதல் மீண்டும் திருமணம் செய்து கொண்டாடிய சூர்யா–ஜோதிகா
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோரின் திருமண வாழ்க்கை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இருவரும் தங்களது மகன், மகளுடன் மீண்டும் திருமணம் செய்துகொள்வது போன்ற காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். செப்டம்பர்
Surya


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோரின் திருமண வாழ்க்கை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இருவரும் தங்களது மகன், மகளுடன் மீண்டும் திருமணம் செய்துகொள்வது போன்ற காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். செப்டம்பர் 11ஆம் தேதியுடன் தங்களது திருமணம் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, இந்த காணொளிக்கு The Sequel என பெயரிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், தங்களது 20 ஆண்டுகால அன்பையும் போராட்டங்களையும் கொண்டாடும் வகையில் திருமண உறுதிமொழியை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

குறைபாடற்ற திருமண வாழ்க்கையை கொண்டாடுவதற்காக இது நடத்தப்படவில்லை என்றும், குறைகள், அனுசரிப்புகள், புரிதல், தியாகங்கள் மற்றும் ஒருவரையொருவர் தன்னலமின்றி நேசிப்பது ஆகியவற்றை கொண்டாடுவதற்கான நிகழ்வு என்றும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் என்ற உணர்வையும், ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட மனிதர்களாக மாறியிருக்கிறோம் என்பதையும் கொண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிஜமாகாது என ஒருகாலத்தில் தோன்றிய கனவு, தற்போது தனது வாழ்நாள் முழுவதும் தான் கனவு காணப்போகும் நிஜமாக மாறியிருப்பதாகவும் ஜோதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தான் எப்போதும் மகிழ்ச்சியான மனிதராக இருப்பேன் என்றும், வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கத் தேர்வு செய்வேன் என்றும் அவர் உறுதியேற்றுள்ளார். வாழ்க்கையை கொண்டாடுவேன் என்றும், தான் நேசிக்கும் ஆண் தன்னையும் தாண்டி தன்னை மதிக்கும்போது வாழ்க்கையே ஒரு பரிசாக மாறிவிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும், இந்த உலகில் இருப்பவை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் முழுமையற்றவையே என்றும், அந்த இடைவெளிகளை நாம் எவ்வாறு நிரப்பத் தேர்வு செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு காலையும் தன்னை பாதுகாக்கும் ஒரு ஆணின் கரங்களில் விழித்தெழுவதற்கும், தனது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அழகான பிள்ளைகளுக்காகவும் நன்றியுடன் இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்றும், நாம் உருவாக்கக்கூடிய ஒரே உண்மையான சொத்து ஆரோக்கியம்தான் என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார். எவ்வளவு ஆடம்பரமான செங்கல் வீடாக இருந்தாலும் அதில் கசிவுகள், கரையான்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் இருப்பதைப் போலவே, வாழ்க்கையிலும் குறைகள் இருப்பது இயல்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சிறந்த தாயாக இருப்பேன் என்றும், சமைப்பது, சுத்தம் செய்வது அல்லது உதவுவது மட்டுமல்லாமல், தனது புன்னகையின் மூலம் பிள்ளைகளுக்கு பெற்றோரின் வாழ்க்கைக் கதையை மீண்டும் வாழத் தூண்டும் தாயாக இருப்பேன் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.

சூர்யாவை குறிப்பிட்டு எழுதியுள்ள ஜோதிகா, இருவரும் சண்டையிட்டு பின்னர் சமாதானமாகி, ஒவ்வொரு முறையும் அவருடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வளரும் அந்த குறைபாடுள்ள மனைவியாகவே எப்போதும் இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

அதேபோல், தங்களது நட்பை எல்லாவற்றிற்கும் மேலாகப் போற்றிப் பாதுகாப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கணவராகவும், குழந்தைகளின் தந்தையாகவும் மட்டுமல்லாமல், தனக்கு நிகரானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும், அரட்டைத் தோழராகவும், சிறந்த நண்பராகவும் ஒரே மனிதருக்குள் இருப்பதை காண்பது அரிது என்றும் சூர்யா மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதியாக, தங்களது அடுத்த 20 ஆண்டுகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஜோதிகா, குறைகளுடன் இருக்கும் நாம், நிறைவான புரிதலுடன் தொடர்ந்து பயணிப்போம் என்ற உணர்வுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ