Enter your Email Address to subscribe to our newsletters

மதுராந்தகம் , 16 செப்டம்பர் (ஹி.ச.)
2026 ஏப்ரல் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), ஜானகிராமன் (நாம் தமிழர்), பி.சுகந்தி (சிபிஎம்) ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா ( திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா ( நாதக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிடவும், பரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA