கடையநல்லூரில் பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு
தென்காசி, 16 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜாரில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் (76), நேற்று கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், தலையணை கு
கொள்ளை


தென்காசி, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜாரில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் (76), நேற்று கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், தலையணை குறித்து விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் கேட்கும் தலையணையை காரில் சென்று காண்பிக்குமாறு சந்தானகிருஷ்ணனிடம் கேட்டதாக தெரிகிறது.

இதனை நம்பிய சந்தானகிருஷ்ணன், அந்த நபருடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை காருக்குள் இழுத்துப் போட்டு கதவை அடைத்த மர்ம நபர்கள், காரில் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை சாலையில் சென்ற சிலர் பார்த்து, காரின் பதிவு எண்ணை குறித்து உடனடியாக கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே முதியவரை காரில் இருந்து இறக்கிய மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தங்க மோதிரங்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சந்தானகிருஷ்ணன் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் பகுதி மற்றும் முதியவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை நடைபெற்று வருவதுடன், மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P