கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - வனத்துறை அறிவிப்பு
தேனி, 16 செப்டம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவியில், 110 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பருவமழ
Tourists enjoy an enthusiastic bath at Kumbakkarai Falls.


தேனி, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவியில், 110 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கும்பக்கரை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து சீராக அதிகரித்துள்ளது. அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் ஆய்வு செய்த நிலையில், குளிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் நிலவுவதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து 110 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு அருவியின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b