கட்டணம் வசூலிக்கும் கமிஷன் ஏஜென்டாக மாறிவிட்டார் மோடி - மாணிக்கம் தாகூர்
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) UPI பண பரிவர்த்தனைக்கு கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 6 அன்று MDR கட்டணம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சாதித்தார் நிதி அமைச்சர் நிர
Manickam Tagore


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

UPI பண பரிவர்த்தனைக்கு கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில்,

ஆகஸ்ட் 6 அன்று MDR கட்டணம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சாதித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். தொடர்ந்து ஆகஸ்ட் 10 அன்று பாராளுமன்றத்தில், MDR விதிமுறை கட்டமைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று நா கூசாமல் பேசி மக்களை ஏமாற்றினார்கள்.

ஆனால், சரியாக ஒரு மாதம் கழித்து செப்டம்பர் 14 அன்று நிதி அமைச்சகம் திடீரென அரசாணையை வெளியிட்டது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் MDR கட்டணங்களையும் அமல்படுத்தி பாஜகவின் முகமூடியை அவர்களே கிழித்துக் கொண்டார்கள்.

ரூ. 2,000-க்கு மட்டுமே கட்டண விலக்கு என்று சொல்லி, மறைமுகமாக UPI மீது கட்டணம் சுமத்துவதற்கான வாசலைத் திறந்துவிட்டார்கள்.

NPCI தரவுகளின்படி, ஐந்தில் ஒருவர் (20%) செய்யும் தனிநபர் பணப் பரிவர்த்தனைகள் ரூ. 2,000-க்கு மேல் தான் இருக்கின்றன. வாடகை, குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவ அவசரம் என மக்கள் அனுப்பும் நியாயமான தொகையையும் விட்டுவைக்காமல் குறிவைக்கிறார்கள்.

வாடிக்கையாளருக்குக் கட்டணம் இல்லை என்று அரசு தந்திரமாகச் சொல்கிறது.

ஆனால், வியாபாரிகள் மீது MDR கட்டணம் சுமத்தப்பட்டால், இறுதியில் அந்தச் சுமை சாமானிய நுகர்வோரின் தலையில்தானே விழும்?

நமது தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியது போல, அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு பேமெண்ட் முதலாளிகளுக்கும் பணிந்துபோய், இந்தியாவின் Zero-MDR கொள்கையை மோடி அரசு அடகு வைத்துவிட்டது.

வெறும் 5 நிமிடம் கூகுள் செய்து பார்த்தாலே பாஜக அரசின் பொய்கள் சுக்குநூறாகிவிடும்!

அரசுக்கு RBI வழங்கிய உபரி ஈவுத்தொகை மட்டும் ₹2.87 லட்சம் கோடி.

UPI அமைப்பைப் பயன்படுத்தும் பங்குச்சந்தைப் பட்டியலிடப்பட்ட வங்கிகள் ஈட்டிய லாபம் ₹4.11 லட்சம் கோடி.

UPI-ஐ இயக்கும் லாப நோக்கற்ற அமைப்பான NPCI ஈட்டிய வரியற்ற உபரி ₹1,888 கோடி.

உண்மை இவ்வாறிருக்க, UPI பரிவர்த்தனைகளால் யாருக்கு நஷ்டம் வந்துவிட்டது? அரசு எதற்கு மானியம் தருகிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது?

இந்தியாவில் ஏடிஎம்கள் மற்றும் ரொக்கப் பணப் போக்குவரத்தை நிர்வகிக்க ஆண்டுக்கு ₹30,500 கோடி செலவிடப்படுகிறது.

செலவைக் குறைக்க வேண்டுமானால் ரொக்கப் புழக்கத்தைக் குறைத்து UPI-ஐ ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, UPI மீது கட்டணம் போடுவது அப்பட்டமான பகற்கொள்ளை!

ஒரு நபர் தனது நண்பருக்கு அவசரத் தேவைக்காகவோ அல்லது ஆடம்பரச் செலவுக்கோ UPI மூலம் ₹1,00,000 அனுப்புகிறார்;

மற்றொருவர் ஒரு எளிய மளிகைக் கடையிலோ அல்லது காய்கறிக் கடையிலோ ₹2,500 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவிட்டு QR குறியீட்டை ஸ்கேன் செய்து செலுத்துகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக, இந்த இரண்டு பரிவர்த்தனைகளுக்கும் சர்வர்களில் ஏற்படும் கட்டமைப்புச் செலவு துல்லியமாக ஒன்றுதான்.

அப்படியிருக்க, ₹1 லட்சம் பரிவர்த்தனைக்கு எந்தக் கட்டணமும் இல்லாத போது, மிகக் குறைந்த லாப வரம்பில் அன்றாடம் வியர்வை சிந்திப் பிழைக்கும் எளிய சிறுகடைக்காரர் மீது மட்டும் கட்டணத்தைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?

அமெரிக்காவில் வர்த்தகர்கள் 35% வரை லாபம் ஈட்டுவதால் கட்டணங்களைச் சுமக்க முடிகிறது;

ஆனால், வெறும் 10% முதல் 12% மட்டுமே ஈட்டும் இந்திய சில்லறை வணிகர்களால் இந்தச் சுமையைத் தாங்க முடியாது.

இறுதியில் இந்தக் கட்டணம் விலைவாசி உயர்வாக சாமானிய நுகர்வோரின் தலையில்தான் விடியும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறோம் என்று வாய்ச்சவடால் அடித்த மோடி அரசு, இப்போது எளிய மக்களின் அன்றாடப் பணப் பரிமாற்றங்களின் மீதே குறுக்குவழியில் வரி வசூல் வேட்டை நடத்தத் துடிக்கிறது!

தொடக்கத்தில் Free Free என்று ஆசை காட்டி மக்களை டிஜிட்டல் வலைக்குள் இழுத்துவிட்டு, இப்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் Fee... Fee... என்று கழுத்தை நெரிக்கும் கொள்ளை அரசாக மோடியின் ஆட்சி தரம் தாழ்ந்துவிட்டது!

தேர்தல் நேரத்தில் 'இலவசம்' என்று நாடகமாடும் நரேந்திர மோடி, ஆட்சியில் உட்கார்ந்தவுடன் மக்களின் பாக்கெட்டில் கைவைத்து 'கட்டணம்' வசூலிக்கும் கமிஷன் ஏஜென்டாக மாறிவிட்டார்!

கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்யும் இந்த மோடி அரசு, கஷ்டப்பட்டுப் பிழைக்கும் சாமானியனின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கமிஷன் அடித்து கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்பப் பார்க்கிறது.

பாராளுமன்றத்தில் பச்சைப் பொய், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மக்கள் தலையில் சுமை! சாமானிய மக்களின் வியர்வையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் இந்த Fee Fee மோடி அரசின் பகற்கொள்ளைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN