Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
யு.பி.ஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனையின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர்களுக்கு இடையிலான யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2,000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை என்றும், யு.பி.ஐ மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.2,000-க்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் நேரடியாக இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்றும், மாறாக வணிகர்களிடமிருந்தே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், இதன் தாக்கம் பொதுமக்களை மறைமுகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரு வணிகர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அந்தச் செலவை ஏற்றுக்கொண்டு தங்களது லாபத்தை குறைக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக பொருட்களின் விலையை உயர்த்தி அந்தச் சுமையை மறைமுகமாக பொதுமக்கள் மீது சுமத்தக்கூடும் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கும் வகையிலும் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டதாகவும், தற்போதும் பல இடங்களில் யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடைமுறையால் கருப்புப் பணப் புழக்கம் கணிசமாகத் தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப் பரிமாற்றம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யு.பி.ஐ சேவையை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும்போது, வெளிப்படையான பணப் பரிமாற்றத்தால் அரசுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, ரூ.2,000-க்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு, வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தற்போதுள்ள இலவச யு.பி.ஐ பரிவர்த்தனை நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ