Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமுருகன் கடந்த 2023-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வேங்கைவயல், இறையூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும், அந்த நீரை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலில் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றதாகவும், பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடித்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam