Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாகவும், மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், கழகப் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்டோர் தனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்ததாகவும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததாகத் தெரிவித்துள்ள அவர், நாளை செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி அனைத்து கழக அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும், கழகத்தின் 78-ம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ