Enter your Email Address to subscribe to our newsletters

கோலார் தங்கவயல் , 16 செப்டம்பர் (ஹி.ச.)
கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரசாயன வண்ணம் பூசப்பட்ட 10 டன் போலி பாக்கு மூட்டைகளை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கலி போலீஸ் எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடி வழியாக பெங்களூருவுக்கு போலி பாக்குகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கும், தாலுகா சுகாதாரத்துறை அதிகாரி சுகுனாவுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நங்கலி சுங்கச்சாவடி அருகே போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு லாரியை மறித்து சோதனை செய்தனர்.
அதில் 3 வகையான போலி பாக்கு மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவற்றில் ஆபத்தான ரசாயன வண்ணம் பூசப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 டன் போலி பாக்கு மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி சுகுனா கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக இந்த போலி பாக்குகள் கடத்தி வரப்பட்டதாக தெரிவித்தார்.
பாக்குகளில் பூசப்பட்டுள்ள செயற்கை வண்ணங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பாக்கு மாதிரிகள் ரசாயன பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகுனா தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA