Enter your Email Address to subscribe to our newsletters

ஏலூரு , 17 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர முன்னாள் துணை முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான ஆள்ளா காளிகிருஷ்ண சீனிவாஸ் என்ற ஆள்ளா நானி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு ஆந்திர தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஏலூரில் உள்ள நானியின் வீட்டுக்கு சென்ற லோகேஷ், அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ்,
அரசியலில் கண்ணியத்துக்கும், ராஜதந்திரத்துக்கும் அடையாளமாக நானி திகழ்ந்ததாக கூறினார்.
சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தபோதும், அவர் ஒருபோதும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட்டதில்லை என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக மட்டுமே சட்டமன்ற நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நம்பியவர் என்றும் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ., எம்.எல்.சி., அமைச்சர், துணை முதல்-மந்திரி என பல்வேறு பதவிகளில் நானி ஆற்றிய பணிகள் நினைவுகூரத்தக்கவை என்றும், கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் ஆற்றிய சேவை மறக்க முடியாதது என்றும் லோகேஷ் கூறினார்.
மேலும், ஒழுக்கத்துடன் அரசியலில் செயல்பட்ட நானியைப் போன்றவர்களை பார்த்துதான் இளைஞர்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றனர் என்று உருக்கமாக தெரிவித்தார்.
நானியின் குடும்பத்துக்கு தெலுங்குதேசம் கட்சி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து ஆதரவாக இருப்போம் என்றும் உறுதியளித்தார்.
நானியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று லோகேஷ் தெரிவித்தார்.
அமைச்சர்கள் கொலுசு பார்த்தசாரதி, நிம்மல ராமாநாயுடு, எம்.பி. புத்தா மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மற்றும் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் நானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA