Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார், பூபாலன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன், 33. சென்னை எழும்பூரில் உள்ள ஐ.டி.எப்.சி. வங்கியில் விற்பனை நிர்வாகியாக வேலை செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு, பீச் ரயில் நிலையம் அருகே ஒருவர் அளித்த, 11 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, கார்த்திகேயன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாண்டி பஜார், சி.என்.செட்டி சாலை மேம்பாலத்தின் மீது சென்றபோது, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கும்பல், கார்த்திகேயனை வழிமறித்து, 11 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியை பறித்து சென்றது.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், மலேஷியாவில் உள்ள கார்த்திகேயன் உறவினர் கூறும் இடங்களுக்கு சென்று, அங்கு வழங்கப்படும், ‘ஹவாலா’ பணத்தை பெற்று, அவர் தெரிவிக்கும் வங்கி கணக்கில் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, கார்த்திகேயனுக்கு 1 லட்சம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என, தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா, வங்கி ஊழியரின் நடமாட்டத்தை நோட்டமிட்டு இந்த கும்பல் செயல்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள நான்கு கொள்ளையர்களையும் விரைந்து கைது செய்வதற்காக தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b