செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் ரயில்கள் 20 நிமிடம் தாமதம் - பயணிகள் கடும் அவதி
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச) செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை முதல் கடும் தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. விழுப்புரம்
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் ரயில்கள் 20 நிமிடம் தாமதம் - பயணிகள் கடும் அவதி


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச)

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்று காலை முதல் கடும் தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

விழுப்புரம் அருகே ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொலைதூர விரைவு ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இயக்கப்படுவதால், புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் அனைத்து மின்சார ரயில்களும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து செல்கின்றன.

காலை நேர பரபரப்பான வேளையில் ஏற்பட்டுள்ள இந்த தாமதத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சிக்னல் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு ரயில் சேவை வழக்கம் போல் சீராகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b