Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, தவெக அரசின் அராஜகங்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறைகளாலும் திமுகவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P