இந்தியா கூட்டணியை உடைக்க தி.மு.க சதி - துரை வைகோ குற்றச்சாட்டு
தூத்துக்குடி, 17 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செ
துரை வைகோ


தூத்துக்குடி, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, விஸ்வபிரம்ம ஜெயந்தியையொட்டி கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தியாகராஜ பாகவதர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,

திமுகவினர் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை என்றும், ஆனால் தனிநபர் தாக்குதல் மற்றும் கொச்சையான விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் ‘பென்’ அமைப்பு, கூட்டணியில் இருந்தபோதே கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதில் போக்குவரத்து நெரிசல், மீனவ குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறிய துரை வைகோ, இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ஜோசப் விஜய் மாற்று ஏற்பாடு செய்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அமைக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு கொண்டு வந்தால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெருக்கடியை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இடைத்தேர்தலை பொறுத்தவரை மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த துரை வைகோ, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு லஞ்ச லாவண்யமற்ற வெளிப்படையான அரசாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

முதல்வரின் லண்டன் பயணம் குறித்தும் பேசிய அவர், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிக்கை வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கை சாமானிய மக்களையும், சிறு வியாபாரிகளையும் பாதிக்கும் எனக் கூறிய அவர், மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்துவரும் காலங்களில் பாஜகவுக்கு திமுக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கலாம். பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது என துரை வைகோ குற்றம்சாட்டினார்.

மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும், காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கி வலுவான இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் சதித்திட்டம் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பாஜகவின் ஆதரவு கட்சியாக திமுக மாறி வருகிறது என்றும் துரை வைகோ விமர்சித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam