Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 செப்டம்பர் (ஹி.ச.)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 78-வது ஆண்டு தொடங்குவதையொட்டி, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும், திமுக தொடங்கப்பட்ட நாளும் கடைப்பிடிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், அனைத்து திமுக அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், திமுகவின் 78-வது ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் கட்சிக் கொடிகளை புதுப்பித்து ஏற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, திமுகவின் 78-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேரறிஞர் அண்ணா விதைத்து, தலைவர் கலைஞர் வளர்த்து, தாங்கள் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி, சுயமரியாதை, தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்,பயணத்தில் வெல்வோம என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam