Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 செப்டம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அனவன் குடியிருப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று நடமாடி வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அப்பகுதியில் வேலைக்குச் சென்ற கூலித் தொழிலாளி ஒருவரை அந்தக் கரடி தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கரடி அப்பகுதியில் தொடர்ந்து சுற்றித் திரிந்ததால், பொதுமக்கள் வெளியே வரவே அச்சமடைந்தனர். விவசாயப் பணிகளுக்குச் செல்லவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் மக்கள் தயங்கி வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் அனவன் குடியிருப்பு பகுதியில் கரடியைப் பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் கரடி சிக்கியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது, அது சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்பது தெரியவந்தது.
கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரடி பிடிபட்டதால் அனவன் குடியிருப்பு பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b