Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், பழமலைநகர் பின்புறம் உள்ள கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிவகங்கை நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இரண்டு இளைஞர்களும் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன், கண்மாய் கரையில் சிறிது தொலைவில் புதிய கார் ஒன்று கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞர்களின் தொலைபேசியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இரண்டு இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெய்வேந்திரன் புதிதாக வாங்கிய காரை முதல் சர்வீஸுக்காக மாருதி ஷோரூமில் விட்டுவிட்டு, மீண்டும் காரை எடுக்கச் சென்றபோது இந்த கொலை சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரையும் விரட்டிச் சென்று தாக்கியதாக தகவல் கிடைத்தது.
இதனிடையே, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார் மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் தற்போது கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / vidya.b