Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகம் எனப்படும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நிறைவுற்ற பிறகு பொது தரிசனத்திற்கு காலை 10 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பக்தர்கள் மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனத்தை முடித்த பிறகு கிழக்கு கோபுரம் வழியாக வெளியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு, அதாவது செப்டம்பர் 20-ஆம் தேதி வரை கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகவே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b