கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமாக பந்தக்கால் நடும் வைபவம் விமரிசை
திருவண்ணாமலை, 17 செப்டம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக முகூர்த்தக்கால் எனப்படும் பந்தக்கால் நடப்படுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். இதற்காக மங்களகரமான மூங்கில் மரம் தேர்வ
கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமாக பந்தக்கால் நடும் வைபவம் விமரிசை


திருவண்ணாமலை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக முகூர்த்தக்கால் எனப்படும் பந்தக்கால் நடப்படுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். இதற்காக மங்களகரமான மூங்கில் மரம் தேர்வு செய்யப்பட்டு, அதனை சந்தனம், குங்குமம், மலர் மாலைகளால் அலங்கரித்து, வேத மந்திரங்கள் முழங்க புனிதப்படுத்தப்படுகிறது. இந்த பந்தக்கால் நடப்பட்ட பின்னரே திருவிழாவிற்கான பணிகள் முறையாக ஆரம்பிக்கப்படுகின்றன என்பது ஐதீகம்.

அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய ஒளித் திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை குறிக்கும் வகையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை பூர்வாங்க பணிகள் மேற்கொள்வதற்கான புனித பந்தக்கால் நடும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் நடப்பட்ட இந்த பந்தக்காலைச் சுற்றி பக்தர்கள் கூடி நின்று வழிபாடு செய்தனர்.

இந்த பந்தக்கால், திருவிழா எவ்வித தடையுமின்றி இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.

பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, வரும் நாட்களில் கொடியேற்றம், தேரோட்டம் மற்றும் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு என திருவிழா அதன் உச்சகட்டத்தை எட்டும்.

Hindusthan Samachar / vidya.b