Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான வெளிநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டும், கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக நிறைவடையாமல் உள்ளதாகக் கூறி, பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரி மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்களும் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்த நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான வெளிநோயாளிகள் பிரிவை 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் ஒட்டுமொத்தமாக 57 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam