Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வைக் காண்பதற்காக நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் மற்றும் சித்திரை வீதிகளில் காத்திருந்தனர்.
இந்நிலையில், கோவிலுக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டபோது மேற்கு கோபுர வாசல் பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட நேரமாக காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகார்டுகளை முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் முன்னோக்கிச் சென்றபோது, தள்ளுமுள்ளு காரணமாக நிலைதடுமாறிய சிலரின் கால்கள் பேரிகார்டுகளின் இடுக்குகளில் சிக்கின.
இதில் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வலியால் அலறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
பேரிகார்டுகளில் சிக்கிய பக்தர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்த நிலையில், கோவிலின் நுழைவு வாயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி பக்தர்களை ஒழுங்குபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P