Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 49 வேட்புமனுக்களும், தாராபுரம் தொகுதியில் 51 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டிருந்ததால், வேட்புமனு தாக்கல் பணிகளுக்கு இடைவெளி விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் இன்று அந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள மனுக்கள், விதிமுறைகளை பூர்த்தி செய்யாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.
பரிசீலனைக்குப் பிறகு, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலையுடன் வாபஸ் காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னரே இரு தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b