அதிகாரி அறைக்குள் தெரு நாய்களை அவிழ்த்து யுவசேனா போராட்டம்
மும்பை , 17 செப்டம்பர் (ஹி.ச.) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் பலர் காயமடைந்த நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி யுவசேனா அமைப்பினர் நகராட்சி
A


மும்பை , 17 செப்டம்பர் (ஹி.ச.)

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

நாய்க்கடியால் பலர் காயமடைந்த நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி யுவசேனா அமைப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நாசிக் மாவட்ட யுவசேனா தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையிலான நிர்வாகிகள், நிபத் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது சாக்குகளில் கட்டி கொண்டு வந்திருந்த சில தெரு நாய்களை, நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலக அறைக்குள் திடீரென அவிழ்த்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

தொடர்ந்து, அதிகாரியின் மேசையில் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவித்து யுவசேனா அமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபத் பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரே உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நகராட்சி அலுவலகத்துக்குள் தெரு நாய்களை அவிழ்த்து விட்டு நடத்தப்பட்ட இந்த நூதன போராட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA