கடலூரில் புதிய சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு -வீடுகளில் கருப்புக் கொடி கட்டி நொச்சிக்காடு மக்கள் காத்திருப்பு போராட்டம்
கடலூர், 17 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டத்தின் மிகவும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதியாக விளங்கும் நொச்சிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த
கடலூரில் புதிய சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி நொச்சிக்காடு மக்கள் காத்திருப்பு போராட்டம்


கடலூர், 17 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டத்தின் மிகவும் வளம் கொழிக்கும் வேளாண் பகுதியாக விளங்கும் நொச்சிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலங்களை நம்பியே பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள், இந்த அறிவிப்பால் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

விவசாயம்தான் தங்களின் ஒரே ஜீவாதாரம் என்றும், விளைநிலங்களை இழந்தால் தங்கள் வாழ்வாதாரமே முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைகள் வந்தால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனைக் கண்டித்து, நொச்சிக்காடு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் கருப்புக் கொடிகளை கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு இந்த சிப்காட் திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b