Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாளில் அவர் கனவு கண்ட 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்பதற்காக போராட உறுதியேற்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் இன்று உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தந்தைப் பெரியாரை வணங்கி போற்றுகிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டங்களை நடத்தி, வென்றெடுத்துக் காட்டியவர் தந்தைப் பெரியார்.
அவரது அந்த உறுதி தான், தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக மோசமான நிலையில் இருந்த வன்னிய மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டத்தை 39 ஆண்டுகளுக்கு முன் அவரது பிறந்தநாளில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தந்தைப் பெரியாரின் கனவு. அது தான் பாட்டாளி மக்களின் இலட்சியம்.
பெரியாரின் கனவை நனவாக்கவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இலட்சியத்தை வென்றெடுக்கவும் போராடுவதற்கு இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN