Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச)
பெரியார் ஈ.வெ.ராமசாமியின் 147-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்க உள்ளனர்.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அன்றைய தினம் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்படும் என்றும் 2021-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலகத்தின் பின்புறம் உள்ள ராணுவ மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, அவரது தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பையும் வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பது, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பார்வையுடன் செயல்படுவது, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தன்னை அர்ப்பணிப்பது உள்ளிட்ட உறுதிமொழி வாசிக்கப்பட உள்ளது.
மேலும், மானுடத்தின் மீதான பற்றையும் மனிதாபிமானத்தையும் போற்றுவதுடன், சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைக்க உறுதியேற்பதாகவும் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. இந்த உறுதிமொழியை முதலமைச்சர் விஜய் வாசிக்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவருடன் இணைந்து உறுதிமொழி ஏற்க உள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ