Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்று வரும் நிலையில், விழா ஏற்பாடுகளில் கோவில் அறங்காவலர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்றைய குடமுழுக்கு விழா முழுவதும் தற்போதைய தவெக அரசு தனது அதிகாரிகள் மூலம், கோவில் அறங்காவலர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அறங்காவலர்களை புறக்கணித்து அதிகாரிகள் மூலம் குடமுழுக்கு விழாவை நடத்துவது, இதுதொடர்புடைய தமிழ்நாடு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கும் முரணானது என்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்களுக்கு நிகழ்விடத்தை அணுகுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து இன்று காலை முதல் பல்வேறு சமூக வலைதளப் பதிவுகள் தமக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சில குறைபாடுகள் எந்தவொரு அரசின் காலத்திலும் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், தற்போதைய விழாவில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தற்போதைய அரசே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதில் முன் அனுபவம் பெற்ற அறங்காவலர்களை திட்டமிடல் பணிகளில் இருந்து முழுமையாக விலக்கிவிட்டு, இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதில் முன் அனுபவம் இல்லாத அதிகாரிகள் மூலம் குடமுழுக்கு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஆர். குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பணிகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் 2021 முதல் 2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை மீட்டுருவாக்கம் செய்தது உள்ளிட்ட முக்கியமான புனரமைப்பு பணிகளும் அந்த காலகட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ