Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 செப்டம்பர் (ஹி.ச.)
நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து, அவற்றை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், வளர்ச்சி மற்றும் நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைத் தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில் சட்டத்திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய சட்டத்திருத்தத்தின்படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்தும்போது ஊராட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை எனக் கூறியுள்ள சீமான், நிலம் கையகப்படுத்துவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நகரத் திட்ட இயக்குநருக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் இன்றி நிலங்களைக் கையகப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது ஜனநாயக நடைமுறைகளைப் பாதிக்கும் எனக் கூறியுள்ள அவர், வேளாண் நிலங்களைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிக்கு மாறாக இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், ஏழை, எளிய மக்களின் நிலங்களை அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam