Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி முதலில் பந்து வீசி, ஆப்கானிஸ்தான் அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
பின்னர் 15 ஓவர்களுக்குள்ளாகவே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
தொடரை கைப்பற்றியுள்ளதால், கடைசி போட்டியில் அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
இதனால் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்குரும் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.
தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை, முதல் 2 ஆட்டங்களிலும் தொடக்கம் சரியாக அமையவில்லை.
அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இரு போட்டிகளிலும் டக்-அவுட் ஆனார். கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தர அவர் முயற்சிப்பார்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற 10 முழுமையான டி20 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.
எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த அணி போராடும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA