Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதல்-மந்திரி கே.சி.ஆரின் சொத்துகள் குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் தெரிவித்த கருத்துகளுக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
கே.சி.ஆருக்கு ஆயிரம் ஏக்கர் பண்ணை இருப்பதாக ரேவந்த் ரெட்டி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ஆனால், சட்டசபையில் கே.சி.ஆருக்கு 67 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தவறான தகவல்களை பரப்பியதற்காக ரேவந்த் ரெட்டி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கே.சி.ஆருக்கு 933 ஏக்கர் நிலம் இருப்பதை அரசு நிரூபித்தால், அந்த நிலங்களை எழுதிக் கொடுக்க தயாராக இருக்கிறோம். கே.சி.ஆர். குடும்பத்தின் சொத்துகள் குறித்து பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறோம்.
கே.சி.ஆர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். எங்களது தாத்தாவிடம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது 67 ஏக்கர் நிலம் இருப்பது எப்படி தவறாகும்?
இதேபோல், அமெரிக்காவில் வேலை செய்து சம்பாதித்ததாக கூறும் ரேவந்த் ரெட்டிக்கு ஜூப்ளி ஹில்சில் அரண்மனை போன்ற வீடும், ஏராளமான சொத்துகளும் எப்படி வந்தன? அவரது சகோதரர்கள் ஏரோஸ்பேஸ் நிறுவனங்களை எவ்வாறு தொடங்கினர் என்பதையும் அவர் விளக்க வேண்டும். மேலும், முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்ற பிறகு அவரது சித்தப்பா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் விளக்க வேண்டும்.
ரேவந்த் ரெட்டி தங்கள் கட்சி தலைவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஒவ்வொரு திட்டத்திலும் முறைகேடு நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார், என
கே.டி.ஆர். கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA