Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
செப்டம்பர் 17-ந்தேதியை முன்னிட்டு ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தெலுங்கானா ரக்ஷண சேனா தலைவி கல்வகுண்ட்ல கவிதா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செப்டம்பர் 17 தெலுங்கானா மக்களின் வீரத்துக்கும், போராட்ட உணர்வுக்கும், தியாக வரலாற்றுக்கும் அடையாளமாகும்.
ஆனால் இந்த வரலாற்றை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக திரித்து வருகிறார்கள்.
தெலுங்கானா இந்தியாவுடன் இணைந்ததற்கு மாநில காங்கிரஸ் நடத்திய போராட்டமே காரணம் என்று முதல்-மந்திரி கூறுவது உண்மைக்கு புறம்பானது. அப்போது மகாத்மா காந்தி சமஸ்தானங்களில் போராட்டம் நடத்துவது தங்களது கொள்கை அல்ல என்று கூறியிருந்தார்.
அதேபோல், முஸ்லிம் மன்னருக்கு எதிராக இந்துக்கள் நடத்திய போராட்டமாக அக்கால வரலாற்றை சித்தரித்து, அதற்கு பா.ஜ.க. மதச்சாயம் பூச முயற்சிக்கிறது. அந்த போராட்டம் நடைபெற்ற காலத்தில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இல்லை.
ஜாகீர்தார்கள், ஜமீன்தார்களின் கொடுமைகளுக்கு எதிராக சாதி, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் தன்னெழுச்சியாக போராடினர்.
வட்டிகோட்ட ஆழ்வார் சுவாமி, சுரவரம் பிரதாபரெட்டி, ராவி நாராயணரெட்டி உள்ளிட்டோர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காளோஜி, தாசரதி, ஷோயபுல்லாகான், மக்தூம் மொயினுதீன் உள்ளிட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகள் மூலம் போராட்ட உணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர்.
அவர்களின் சிந்தனையால் தொட்டி கொமுரய்யா, சாக்கலி அயிலம்மா, ஷேக் பந்தகி, மல்லு சுவராஜ்யம் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதே போராட்ட உணர்வுடன் தெலுங்கானா ரக்ஷண சேனாவும் சாதி, மத வேறுபாடின்றி மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும். மாநிலத்தில் நடைபெறும் அராஜக ஆட்சிக்கு முடிவு ஏற்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு கவிதா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA