Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 17 செப்டம்பர் (ஹி.ச)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயிலில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பழமையான கோயிலில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் சிவாச்சாரியார்கள் வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன், அரசமரத்தடி விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், கருப்பையா, மதுரைவீரன், போர் மன்னன், ராகு-கேது, முத்தால் ராவுத்தர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவைக் காண வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கோயில் கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் சுவாமியை மனமுருகி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ