வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் 16 காட்டு யானைகள் முகாம் - தொழிலாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 16 காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால
Elep


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 16 காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கும். கேரள வனப்பகுதிகளில் இருந்து இனப்பெருக்க காலத்திற்காகவும், உணவு தேடியும் யானைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் யானைகளின் வரத்து தொடங்கியுள்ள நிலையில், அக்காமலை, பன்னிமேடு, சின்னக்கல்லார், குரங்குமுடி, சேக்கல்முடி, தலனார், கருமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும், குட்டிகளுடனும் சுற்றி வருகின்றன.

அவ்வப்போது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகள், வீடுகள், மளிகைக் கடைகள் மற்றும் சத்துணவு மையங்கள் உள்ளிட்டவற்றை உடைத்து, உள்ளே இருக்கும் உணவுப் பொருட்களை தேடி சாப்பிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

வால்பாறை பகுதியில் வால்பாறை வனச்சரகம் மற்றும் மானாம்பள்ளி வனச்சரகம் என இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பணியாற்றும் வனத்துறையினர் மனித-விலங்கு மோதலை தடுக்கும் வகையில் இரவு பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்திலேயே 16 காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, தேயிலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஊசிமலை மற்றும் அக்காமலை பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், குட்டிகளுடன் காட்டு யானைகள் சுற்றித்திரிவதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ