Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை மதிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இத்தகைய புனித நிகழ்வில் பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்களை முறையாக வழிநடத்தாமல் நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்கச் செய்து, கூட்ட நெரிசல் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் அரைகுறையாக இருந்ததையே காட்டுவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் மீது புனித நீரின் ஒரு துளியாவது விழுந்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் காத்திருந்த நிலையில், காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இதுபோன்ற புனித நிகழ்வில் ஒவ்வொரு ஏற்பாடும் பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் இதை தவெக அரசு முற்றிலும் தவறவிட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளைப் பெற வந்த பக்தர்களுக்கு அரசின் அலட்சியமான ஏற்பாடுகளும் அவமதிப்புமே பரிசாகக் கிடைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ