கரிக்குப்பம், காரைக்குறிச்சியில் சாதிய வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) சிதம்பரம் அருகே கரிக்குப்பம் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி பகுதிகளில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க
திருமாவளவன்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி பகுதிகளில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரிக்குப்பம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பட்டியல் சமூகத்தினர் விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு சென்றபோது, குறிப்பிட்ட வீதி வழியாக சிலையை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் இரு தரப்பினரிடையே பதற்றம் ஏற்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்பிறகு பள்ளிக்குச் சென்ற பட்டியல் சமூக மாணவர்களை வழிமறித்து, செருப்பை தலையில் வைத்து செல்லுமாறு மிரட்டியதாகவும், சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கரிக்குப்பம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டியல் சமூக மக்கள் பொது சாலையை எந்தவித தடையுமின்றி பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சியில் விசிக விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டதாகவும், அதுதொடர்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதாகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கரிக்குப்பம் மற்றும் காரைக்குறிச்சி சம்பவங்களில் காவல்துறையின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திருமாவளவன்,

சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

கரிக்குப்பம் பகுதியில் தற்போது சமூக பதற்றம் நிலவுவதால், அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam