Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் இணைந்து தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயர்நீத்த 21 பேரின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி,
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு என்று விரைவில் அறிவிப்போம். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நாம் ஆலோசனை இருக்கிறேன், ஆலோசனைக்கு பிறகு தெரிவிப்பேன்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடாது. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் எனக் கூறியிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் ஆறரை லட்சம் அரசு காலி பணியிடங்கள் உள்ளது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் நிரப்பப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. இது சமூக நீதிக்கு எதிரானது.
கடந்த திமுக ஆட்சியிலும் இது கடைபிடிக்கப்பட்டது. திமுகவின் தவறான கொள்கையை தவெக-வும் கடைபிடிக்கிறது. திமுகவை விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. திமுக எதை செய்தார்களோ அதற்கு நேர் எதிராக செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் தவெக கூட்டணியில் உள்ளார்களா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கூட்டணியில் இருந்துக்கொண்டே தணியாக போட்டியிடுவது குழப்பமான நிலைப்பாடு.
காங்கிரஸ் ஆவேசமாக பேசி வருகிறார்கள். மக்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. விஜய்க்கு மட்டும்தான் வாக்களித்தார்கள். இவர்கள் எல்லோரும் திமுக தயவால் வெற்றி பெற்றவர்கள்.
தவெக-வுக்கு வந்து பிறகு வீர வசனம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே அடக்கி வாசிக்க வேண்டும். தாராபுரம் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
திமுக வேண்டாம் என்பதால்தான் தவெக-வை மக்கள் தேர்வு செய்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என கூறுங்கள். மின்வெட்டுக்கு அரசின் தோல்வியே காரணம். அரசு முன்கூட்டியே திட்டமிட்டு இருக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவைப் பயிர்கள் கருகி விட்டன. சம்பா சாகுபடி யாவது காப்பாற்ற வேண்டும். கர்நாடக அணையில் தண்ணீர் உள்ளது. ஆனால் தவெக அரசு கேட்பதில்லை. தொடர்ந்து முறையீடு செய்ய வேண்டும். வழக்கு தொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மெத்தனமாக இருந்து விட்டால் தண்ணீர் கிடைக்காது. வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. பிரதமரை பார்க்க வேண்டும். நீர்வளத்துறை அமைச்சர் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து போராட வேண்டும். தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தலைமைப் பண்புக்கு முதன்மையானது பெண்களுக்கு மரியாதை கொடுப்பது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN