Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
நாகப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு (DRI) ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடல் மார்க்கமாக நாட்டுப் படகில் கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள் நாகை கடற்கரையில் இறக்கப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து, தங்கத்துடன் காரில் சென்ற நபர்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பின்தொடர்ந்தனர்.
மதுரை ரிங் ரோடு அருகே காரை சுற்றி வளைத்த அதிகாரிகள், அதில் இருந்து 8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த நூருல் ஆமீன் வயது 40 மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹமீது வயது 40 ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தங்கம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b