Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 18 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் கப்பல் கட்டும் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில், துகராஜபட்னத்தில் பிரமாண்ட பசுமை கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக மஜகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்.) நிறுவனத்துடன் ஆந்திர அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.டி.எல். மற்றும் நேஷனல் ஷிப் பில்டிங் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பார்க்-ஆந்திரா இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை எம்.டி.எல். நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 12 லட்சம் கிராஸ் டன் அளவிலான கப்பல்களை கட்டும் திறனுடன் இந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. டேங்கர்கள், மொத்த சரக்கு கப்பல்கள், கண்டெய்னர் கப்பல்கள், எல்.என்.ஜி. கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பெரிய கப்பல்கள் இங்கு கட்டப்பட உள்ளன. எதிர்கால தேவைக்கு ஏற்ப கப்பல் கட்டும் திறனை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் கப்பல் கட்டுமானத்துடன் கடல் பொறியியல், சரக்கு போக்குவரத்து, சேவை மற்றும் அதனை சார்ந்த தொழில்களும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துகராஜபட்னத்தில் கப்பல் கட்டும் தளம், கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் துறைமுகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கப்பல் தொழில் வளாகத்தை உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையின்படி, கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தளத்துக்கு ரூ.29,254 கோடியும், துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.9,513 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA