பாரதிதாசன் நிதி உதவி விவகாரம் - தி.மு.க-வை விமர்சித்த வி.சி.க
தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.) மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனின் கல்வி நிதி விவகாரத்தை அரசியலாக்காமல் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ள
Vck


தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)

மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனின் கல்வி நிதி விவகாரத்தை அரசியலாக்காமல் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பாரதிதாசன் ஒரு தலித் மாணவராக மட்டுமின்றி, கல்வி உரிமைக்காக போராடும் மாணவராக பார்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசி நிதியை விரைவில் விடுவிக்கக் கோரியதாகவும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “பாரதிதாசன் என் தம்பி. இரண்டு நாட்களில் நிதி விடுவிக்கப்படும்” என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் பாரதிதாசன் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

அவருக்கு முதல் ஆண்டுக்கான நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் ஆண்டுக்கான நிதி தொடர்பாக ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக ஆட்சிக் காலத்திலேயே மாணவர் பாரதிதாசன் மற்றும் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டம் குறித்து செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், அப்போதும் திட்டம் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததாகவும் விசிக தெரிவித்துள்ளது.

முதல் ஆண்டு நிதியும் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே வழங்கப்பட்டதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலைகள், காவல் நிலைய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள விசிக, தற்போது பாரதிதாசனின் கல்வி நிதி தாமதத்தை மட்டும் முன்வைத்து அரசியல் செய்வது இரட்டை நிலைப்பாடு என விமர்சித்துள்ளது.

தலித் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி, அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து திமுக பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விசிக பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தபோதும் தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அக்கட்சி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பாரதிதாசனின் கல்வி தொடர்வதற்கு அரசு முழுமையாக உதவும் என்றும், அவருக்கான நிதி இரண்டு நாட்களில் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளதால் பிரச்சினை முடிவுக்கு வரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

கல்வி என்பது அரசியல் ஆயுதம் அல்ல,ஒரு கிராமத்து தலித் மாணவரின் கனவைக் காப்பாற்றுவதே உண்மையான சமூக நீதி” எனக் குறிப்பிட்டுள்ள விசிக, பாரதிதாசனின் கல்வி நிதி விவகாரத்தில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P