கடன் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் பண மோசடி செய்த 6 பேர் கைது
நெல்லை, 18 செப்டம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் வெங்கடேஷ்(வயது 29). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணம்
Vikramasingapuram Police Station


நெல்லை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் வெங்கடேஷ்(வயது 29). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

மேலும் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணம் தேவைப்படும் நபர்களுக்கு கடன் வழங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் சென்னையை சேர்ந்த முகம்மது அக்தார் (25) என்பவருடன் பழக்கமாகி சென்னையில் உள்ள தொழில் அதிபர்களுக்கும் கடன் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முகமது அக்தாரை சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெயச்சந்திரன் என்பவர் தனக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து தெற்கு பாப்பான்குளம் வெங்கடேசிடம் பணம் இருப்பதாகவும் அங்கு சென்று பணத்தை வாங்கி கொண்டு தனக்கு கமிஷன் தரவேண்டும் என்று கூறி ஜெயச்சந்திரனை நேற்று முகமது அக்தார் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.

தொடர்ந்து வி.கே.புரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி சேக்கிழார் தெருவில் உள்ள வெங்கடேசின் அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வெங்கடேசுடன் சிவந்திபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ்(45), ராஜேஷ்(30), கதிர்வேல் பாண்டி(38), சிவசுப்பிரமணியன்(24) ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து அந்த கும்பல் பண பெட்டியை காட்டிவிட்டு வெற்று பத்திரங்கள் மற்றும் 7 காசோலைகளில் கையெழுத்து வாங்கி உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மோசடி கும்பலை ஏற்கனவே கடந்த 1 வாரமாக பின்தொடர்ந்த வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 6 பேர் கும்பலையும் சுற்றி வளைத்தது.

பின்னர் அவர்களை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரூ.10 லட்சம், ரூ.50 லட்சம் என பெரிய தொகைகளை கடனாக தேடுவோரை புரோக்கர்கள் மூலம் இந்த கும்பல் அணுகி உள்ளனர்.

கடன் கேட்கும் நபர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் பணப் பெட்டியைக் காட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்குவதை இந்த கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது.

பின்னர், கமிஷன் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, கடன் தொகையில் சில நோட்டு கட்டுகள் மட்டும் பண கட்டுகளாகவும், மற்ற நோட்டுகளை டம்மி நோட்டுகளாகவும், ரூபாய் நோட்டு அளவில் வெட்டப்பட்ட வெள்ளை தாள்களாகவும் வைத்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட டம்மி பண நோட்டுக்கள் மற்றும் இதர பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN