மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் மர்ம மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டத்தால் பரபரப்பு
மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச) கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று முட்புதர்கள் நிறைந்த குட்டை ஒன்றில் இருந்து மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை
Case of Madurai student Tamilselvan's mysterious death


மதுரை, 18 செப்டம்பர் (ஹி.ச)

கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று முட்புதர்கள் நிறைந்த குட்டை ஒன்றில் இருந்து மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மாணவனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இது சாதாரண மரணம் அல்ல என்றும், இதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மாணவனின் உடல் கடந்த 9 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவனின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்கும் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு அமைப்பினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடதுசாரி மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறும், கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி அவர்கள் ஓட முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலரை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக மதுரை அழகர்கோவில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Hindusthan Samachar / vidya.b