வடகிழக்கு பருவமழை - மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மின்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் வி
ஆலோசனை


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மின்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மின்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் இதுதொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பருவமழையின்போது மின்தடை மற்றும் மின்சார விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மழை மற்றும் பலத்த காற்றினால் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைக்கவும், பலவீனமான மின்கம்பங்களை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின்சார விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மின்கட்டமைப்புகளை ஆய்வு செய்தல், பழுதடைந்த மின்சாதனங்களை சீரமைத்தல் மற்றும் அவசரகாலங்களில் விரைந்து மின்சார சேவையை சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்திலும், மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளில் உள்ள பாதிப்புகளை சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையில், செப்டம்பர் 18 முதல் தொடர்ந்து வரும் நாட்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மின்துறை முன்னெச்சரிக்கை பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மின்சார விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை விரைந்து சரிசெய்து தடையற்ற சேவையை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam